Meditation

SIMPLIFIED KUNDALINI YOGA SOCIETY

A non-profit organisation in Singapore to achieve peace and harmony in the society

HomeAbout SKYPhoto AlbumSKY CoursesCentresArticlesBooksVideosContact Usதமிழ்

 

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிபயிற்சிகள்இடங்கள்நூல்கள்தொடர்பு கொள்க

 

எளிய முறை உடற்பயிற்சி காய கல்ப யோகம்

எளியமுறை குண்டலினி யோகம்

நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?

காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.

உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.

ஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம்இ தூங்குகிறோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.

மறதியும்-விழிப்பும்

எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe) விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.

உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும், இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.

உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான். தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.

இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.

இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.

ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும். எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும் (Impressions Of Deeds).

இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது. பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.

உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும். தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins) போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை, ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.

தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள். இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.

காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம். உயிர் தூய்மைக்கான பக்தி நெறி, ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு, இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.

பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.

மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில், இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று.

உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும். உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினி யோகம்.

உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள். நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதி\u202டிடானம் எனும் நீர் மையத்தையும், மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும், அனாகதமெனும் காற்று மையத்தையும், விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.

எளிய முறை குண்டலினி

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினைச் சக்கரம்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

சாந்தியோகம்

ஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை ஆண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும்.

துரிய நிலை

ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.

தற்சோதனை

துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும். எண்ணம், சொல், செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து தான் யார்? என்று தெளிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம், கடமை, ஈகை, உயிர் விளக்கம், மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.

துரியாதீதம

தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். இதனைச் சமாதியென்றும், சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.

முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம். உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள், வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியே குண்டலினி யோகம்.

சமுதாயச் சீர்திருத்தம்

உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில், மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும், வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.

பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும், உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.

இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள். இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.

நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன். இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.

இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை

  1. ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.

  2. இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.

  3. பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.

  4. ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.

  5. ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.

இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள். இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.

May The Whole World Enjoy Peace, Happiness & Prosperity

Best viewed with Microsoft IE 5.0 and above at 800 x 600 screen resolution
Copyright © 2007 Simplified Kundalini Yoga Society
All rights reserved